ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.. ராகுல் காந்தி உறுதி
|அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பதான்:
குஜராத் மாநிலம் பதான் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். பதான் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டின் மக்கள் தொகையில் 99 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் உள்ளனர். ஆனால் கார்ப்பரேட், ஊடகம், தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு உயர் பதவிகள் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.
அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு அமைப்புக்கு எதிராகவும் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.