தி.மு.க.,வை விட அதிக வாக்குகள் பெற்று தந்தால் விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசு - அ.தி.மு.க. தொண்டர் அறிவிப்பால் பரபரப்பு
|தி.மு.க.,வை விட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என விஜயபாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.,வை விட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் பெற்று கொடுத்தால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசு தருவதாக அ.தி.மு.க தொண்டர் ஒருவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க.,வை விட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார், புதுக்கோட்டை நகரத்தில் அதிக வாக்கு வாங்கித் தரும் வட்டச் செயலாளர்களுக்கு தலா 5 பவுன் தங்கச்சங்கிலி பரிசளிப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். இந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
இதே போல தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் நெய்வத்தளி நெவளிநாதன் சிறப்பு வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் மெய்நின்றநாதர் ஆலயத்தில் இருந்து அவருக்கு ஒரு பரிசு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பில் உள்ளார். அதாவது 4 நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற வைத்தால் அவருக்கு "ஆடி" கார் பரிசாக வழங்குகிறேன் என்றார்.