2026 சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் - சசிகலா பேட்டி
|2026-ல் அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று சசிகலா கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. என்பது என்ன? என்று எல்லோருக்கும் புரியும், மூன்று அணியாக இருக்கின்ற அ.தி.மு.க. ஒன்றாக இணைய வாய்ப்பு வந்துள்ளதாக எனது அனுமானத்தில் கருதுகிறேன்.
தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எந்தவித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது? என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சியின்போது நிர்வாக ரீதியாக இது போன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது.
2026 தேர்தல் என்பது எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன். தி.மு.க. என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டை. அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்தான். எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.