காங்கிரசுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பாரபட்ச நடவடிக்கை: பிரியங்கா காந்தி சாடல்
|விதிகளை மீறியதற்காக பா.ஜ.க. ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும், ஆனால் அது குறித்து யாரும் வாய்திறக்கவில்லை என்று பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் வருமானவரி கணக்கில் நிலவும் முரண்பாடுகளுக்காக வருமான வரித்துறை அபராதம் விதித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.1,823 கோடி மற்றும் ரூ.1,745 கோடி என இரண்டு கட்டங்களாக அபராதம் விதித்து நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கில் இருந்து 135 கோடி ரூபாயை வருமான வரித்துறை எடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை இத்தகைய அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. தேர்தலின்போது, பா.ஜ.க. வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும், பிரதான எதிர்க்கட்சியை நிதி ரீதியாக முடக்குவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் சூழலை சீர்குலைப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதுடன், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி மீதான குற்றச்சாட்டு என்ன? 1994-95, 2014-15 மற்றும் 2016-17 நிதியாண்டுகளில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும், கட்சிக் கணக்கில் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்திருந்தனர். அதுகுறித்த தகவல் ஏற்கனவே வருமான வரித்துறையிடம் வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தகவல் தரவில்லை என்று அரசு குற்றம்சாட்டுகிறது.
காங்கிரஸ் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை எடுத்துள்ளது. அத்துடன் ரூ.3,567 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அத்துடன் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
இப்போது இன்னொரு உண்மை நிலவரத்தை பார்ப்போம். தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள தகவலின்படி, 2017-18ம் ஆண்டில், 1,297 பேர் தங்கள் பெயர், முகவரி மற்றும் முழுமையான தகவல்களை தெரிவிக்காமல் பா.ஜ.க.வுக்கு ரூ.42 கோடி கொடுத்துள்ளனர். பா.ஜ.க.வின் இந்த வருமானத்திற்கு வருமான வரித்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசியல் கட்சிகளின் கணக்கு விதிகளை மீறியதற்காக பா.ஜ.க. ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் அது குறித்து யாரும் வாய்திறக்கவில்லை. காங்கிரசுக்கு பொருந்தும் சட்டம் பா.ஜ.க.வுக்கு ஏன் பொருந்தவில்லை? உண்மையில், தேர்தல் நேரத்தில், எங்களின் குரலையும் 140 கோடி இந்தியர்களின் குரலையும் பலவீனப்படுத்தவே இப்படிப்பட்ட பாரபட்ச நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத திட்டங்களை வெற்றி பெற நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் முடியும்வரை காங்கிரஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று வருமானவரித்துறை உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.