கிருஷ்ணரின் கோபிகையாகவே என்னை கருதுகிறேன் - நடிகை ஹேமமாலினி
|நான் பேர், புகழுக்காக அரசியலில் சேரவில்லை என்று நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
மதுரா,
பா.ஜனதா எம்.பி.யும், பிரபல நடிகையுமான ஹேமமாலினி உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பகவான் கிருஷ்ணரின் ஜென்ம பூமியாக கருதப்படும் மதுராவில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதற்கு மத்தியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நான் பேர், புகழுக்காக அரசியலில் சேரவில்லை. அதைப்போல எந்தவித வசதிக்காகவும் அரசியலில் இணையவில்லை. என்னை கிருஷ்ணரின் கோபிகையாகவே நான் கருதுகிறேன். பிரிஜ்வாசிகளை பகவான் கிருஷ்ணர் நேசிக்கிறார். அவர்களுக்கு உளப்பூர்வமாக சேவை செய்தால்தான் அவர் என்னை ஆசீர்வதிப்பார் என எண்ணுகிறேன். அதன்படியே பிரிஜ்வாசிகளுக்கு சேவை செய்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
மதுராவை சேர்ந்த பிரிஜ்வாசிகளுக்கு சேவை செய்வதற்கு 3-வது முறையாக வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் கூறினார்.