ஈரோடு தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.583 கோடி
|ஆற்றல் அசோக்குமார் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஈரோடு,
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார்.
ஆற்றல் அசோக்குமார் குறிப்பிட்டு உள்ள சொத்து விவரம் வருமாறு:-
ஆற்றல் அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். ஆற்றல் அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500-ம், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. ஆற்றல் அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய பெயரிலும் வாகனம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன.
எனவே ஆற்றல் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரராக ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் திகழ்கிறார். இதேபோல் அவரது மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் உள்ளன.