நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? கணிப்பு வெளியிட்ட பிரசாந்த் கிஷோர்
|2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள ஒரு கட்டத்திற்கான தேர்தல் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவர 10 நாட்கள் கூட இல்லை.
இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், நடப்பு தேர்தலில் அரசமைக்கும் கட்சி மற்றும் கூட்டணி பற்றி சில விவரங்களை சமீபத்தில் கூறினார். இதன்படி, பா.ஜ.க. 300 தொகுதிகளுக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராவார் என சில நாட்களுக்கு முன் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டார்.
அக்கட்சி 270 தொகுதிகளுக்கு கீழ் செல்லாது. கிழக்கு மற்றும் தெற்கில் கூடுதலாக 20 முதல் 25 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும். வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அக்கட்சி தொகுதிகளை இழக்காது. அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதுடன், வாக்கு பகிர்வும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நடப்பு தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும்? என்பது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்து உள்ளார். அவர் கூறும்போது, நடந்து வரும் மக்களவை தேர்தலில் 100 இடங்களுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன்.
அவர்கள் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. 3 இலக்க இடங்களில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்று கூறியுள்ளார். முந்தின முறை பெற்ற தொகுதிகளை விட கூடுதலாக காங்கிரஸ் பெறுவதற்கான வாய்ப்பு பற்றி கிஷோர் கூறும்போது, அதுபற்றி எந்தவித யோசனையும் எனக்கில்லை என கூறினார்.
அவர்கள் 50 முதல் 55 தொகுதிகளுக்குள் பெற்றிருக்கிறார்கள். இப்போது எவ்வளவு பெறுவார்கள்? என எனக்கு தெரியாது. 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நான் எண்ணவில்லை. ஏனெனில், காங்கிரஸ் 100 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பா.ஜ.க. 300 தொகுதிகளில் வெற்றி பெறாது. இதுவே விசயம். 3 இலக்க எண்களில் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டில் மிக குறைந்த அளவாக 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இது அதன் சரிவை வெளிப்படுத்தியது. 2019-ம் ஆண்டில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் வெற்றி பெற்றது.
கிஷோர் தன்னுடைய கணிப்புகளை பற்றி கூறும்போது, நான் பா.ஜ.க.வுக்கோ அல்லது காங்கிரசுக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை. அரசை யார் அமைப்பார்கள்? என்று விரிவான அளவில் பார்க்கிறேன். காங்கிரஸ் இந்த தேர்தலில் 65, 68, 72 அல்லது 55 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பது எனக்கு தேவையற்ற விசயம்.
அது ஒரு விசயமேயில்லை என்பது என்னுடைய எண்ணம். 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்?
அதற்காக நான் ஏன் குழப்பி கொள்ள வேண்டும்? அவர்கள் 100 தொகுதிகளை விட கூடுதலாக வெற்றி பெறுவதற்கான சாத்தியம் உள்ளது என எனக்கு தெரிந்தால், அதுபற்றி நான் கடுமையாக சிந்திக்க வேண்டும். அதுவே ஆட்டத்தின் நிலையை மாற்றும். அந்த கேள்விக்கே இடமில்லை என்று பேசியுள்ளார்.
இதேபோன்று மற்றொரு அரசியல் நிபுணரான யோகேந்திர யாதவ் கூறும்போது, பா.ஜ.க. 240 முதல் 260 இடங்களிலும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 35 முதல் 45 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறினார். மறுபுறம் காங்கிரசோ 85 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் என கூறினார்.
இதுபற்றி கிஷோர் கூறும்போது, அப்படியென்றால் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 275 முதல் 305 இடங்களில் வெற்றி பெறும் என கூறுகிறார். அரசமைக்க 272 தொகுதிகள் தேவை. தற்போது வெளியேறவுள்ள அரசில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 303 முதல் 323 தொகுதிகள் உள்ளன. (சிவசேனா 18 தொகுதிகளை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் வெளியேறி விட்டது). அதனால், யாருடைய அரசு அமையும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.