< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
இமாசல பிரதேசம்:  அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்
நாடாளுமன்ற தேர்தல்-2024

இமாசல பிரதேசம்: அரச குடும்பம் அல்லாத, எம்.பி.யாக தேர்வான ஒரே பெண் கங்கனா ரணாவத்

தினத்தந்தி
|
5 Jun 2024 7:17 PM IST

கங்கனா ரணாவத், இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட்ட 3-வது பெண் ஆவார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் மண்டி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் நடிகை கங்கனா ரணாவத். இவர், தன்னுடைய போட்டியாளரான காங்கிரசை சேர்ந்த விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனால், இமாசல பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வான 4-வது பெண் என்ற பெருமையை கங்கனா ரணாவத் பெறுகிறார். இதுதவிர, அரச குடும்பம் சாராத ஒரே பெண் வெற்றியாளரும் ஆவார்.

இதற்கு முன் 1952-ம் ஆண்டு மண்டி தொகுதியில் ராஜகுமாரி அம்ரித் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கபுர்தலா அரச குடும்பத்தில் இருந்து வந்தவர். நாட்டின் முதல் சுகாதார மந்திரியும் ஆவார்.

இதன்பின்னர், ஜோத்பூர் அரச குடும்பத்தில் இருந்து வந்த சந்திரேஷ் குமாரி என்பவர் 1984-ம் ஆண்டு காங்ரா தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இமாசல பிரதேசத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

இதன்பின்னர், ராம்பூர் அரச குடும்பத்தில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் இமாசல பிரதேச மாநில தலைவரான பிரதீபா சிங், மண்டி தொகுதியில் போட்டியிட்டு 2004, 2013 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றார். கங்கனா, மண்டி தொகுதியில் போட்டியிட்ட 3-வது பெண் ஆவார்.

இமாசல பிரதேசத்தில் திரை துறையில் இருந்து வந்து, போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திரை பிரபலம் ஆவார். பாலிவுட்டில் குயின் என்ற படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவரான கங்கனாவுக்கு இந்த முறை மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்