< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஹேமமாலினி குறித்து பேசிய விவகாரம்: ரன்தீப் சுர்ஜேவாலா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஹேமமாலினி குறித்து பேசிய விவகாரம்: ரன்தீப் சுர்ஜேவாலா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

தினத்தந்தி
|
16 April 2024 7:32 PM IST

அடுத்த 48 மணி நேரம் பிரசாரம் செய்ய ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பா.ஜ.க. எம்.பி.யும், மதுரா மக்களவை தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் நிர்வாகி ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்தை பா.ஜ.க. திரித்து வெளியிட்டிருப்பதாக ரன்தீப் சுர்ஜேவாலா விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த செவ்வாக்கிழமை ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், ரன்தீப்பின் பேச்சு மிகவும் கண்ணியமற்ற, மோசமான மற்றும் நாகரீகமற்ற முறையிலும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு அடுத்த 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் முதல் முறையாக பிரசாரம் செய்வதற்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய மோசமான கருத்துக்களை தேர்தல் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியலமைப்பின் 324-வது பிரிவின்கீழ் உள்ள அதிகாரங்களின்படி, ஏப்ரல் 16-ந்தேதி(இன்று) மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகங்கள் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) போன்றவற்றில் பிரசாரம் மேற்கொள்ள ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்