சந்தேஷ்காளி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்... திரிணாமுல் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
|அடக்குமுறையாளர் ஷேக் ஷாஜஹானை காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஹூக்ளி:
மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் நடத்திய போராட்டம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மோதல் வெடித்துள்ளது.
சந்தேஷ்காளி போராட்டம் தொடர்பான வீடியோக்களை கடந்த சில தினங்களாக திரிணாமுல் காங்கிரஸ் பகிர்ந்து வருகிறது. சந்தேஷ்காளி மண்டல பா.ஜ.க. தலைவரை தொடர்புபடுத்தி வெளியான இந்த வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நேற்று வெளியான வீடியோவில், ஷேக் ஷாஜகானுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 70 பெண்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது என்று பா.ஜ.க. தலைவர் கூறுவதை கேட்க முடிகிறது. இந்த வீடியோ பா.ஜ.க. வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தேஷ்காளி காவல் நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் பாரக்பூர் மற்றும் ஹூக்ளி ஆகிய நகரங்களில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி, சந்தேஷ்காளி விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரசை கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:-
சந்தேஷ்காளியின் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். முதலில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்ற காவல்துறை, இப்போது புதிய ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சந்தேஷ்காளியின் சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் மிரட்டுகிறார்கள். அடக்குமுறையாளர் ஷேக் ஷாஜஹானை காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்களை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம்.
சந்தேஷ்காளியில் திரிணாமுல் காங்கிரஸ் ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்துகிறது. ஆனால் அடக்குமுறையாளர்கள் யாரும் தப்ப முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.