பிரதமர் மோடி தியானம்: பரிகாரம் செய்வதற்காக செல்கிறாரா..? - கபில்சிபல் சரமாரி கேள்வி
|கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் தியானத்தில் ஈடுபடுவது தொடர்பாக கபில்சிபல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சண்டிகார்,
நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி வரை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக எதிர்க்கட்சிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் இந்த தியானத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தேர்தல் கமிஷனையும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே பிரதமரின் இந்த தியானம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில்சிபல் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சண்டிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு தனது சாதனைகள் குறித்து எதுவும் பேசவில்லை. ஏனெனில் அப்படி எதுவும் அவர்களிடம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் என்ன செய்தார்கள்? பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்தது குறித்து எதுவும் பேசுகிறாரா? அவர்களது சாதனைகள்தான் என்ன?
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏதாவது செய்திருந்தால், 'முஜ்ரா, தாலி, ஓட்டு ஜிகாத்' பற்றி எல்லாம் பேசியிருக்கமாட்டார். இந்தியா கூட்டணி அரசு குடிநீர் இணைப்பு, வங்கி சேமிப்பு எல்லாவற்றையும் எடுத்து விடும் என்று கூறியிருக்கமாட்டார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிரதமர் மோடி பெரும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபட்டார். காங்கிரசுக்கு 60 ஆண்டுகளை கொடுத்தீர்கள், எனக்கு வெறும் 60 மாதங்களை கொடுங்கள், ஒரு புதிய இந்தியாவை உருவாக்கி காட்டுகிறேன் என்றெல்லாம கூறினார்.
ஆனால் 120 மாதங்கள் கொடுத்த பிறகும் அவர் எத்தகைய புதிய இந்தியாவை கொடுத்திருக்கிறார்? நாட்டு மக்கள் இன்று ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். பல நாடுகள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 9 முதல் 12 சதவீதத்தை செலவிடுகின்றன. ஆனால் இந்தியாவில் 4 சதவீதத்துக்கும் குறைவான தொகைதான் செலவிடப்படுகிறது.
25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மக்களிடம் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்ட விகிதம் 46 சதவீதம். இது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களிடம் 29 சதவீதமாக உள்ளது. எனவே இதற்கு பரிகாரம் செய்வதற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரி செல்கிறாரா? அப்படியென்றால் நல்லதுதான். அல்லது சுவாமி விவேகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு அங்கே சென்றாலும் நல்லதுதான்" என்று கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.