'துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்' - பிரியங்கா காந்தி
|தங்களை துரோகிகள் என்று அழைக்கும் அரசாங்கம் வரும் என காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
லக்னோ,
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற கட்சி தொண்டர்களுக்கான பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மகாத்மா காந்தியும், ஜவகர்லால் நேருவும் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்தனர். ஆனால் தங்களை தேசதுரோகிகள் என்று அழைக்கும் ஒரு அரசாங்கம் வரும் என்று அவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு அரசாங்கமே நமது மக்களை பலவீனப்படுத்த முயற்சிக்கும் என்றும் அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரேபரேலியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது மோதிலால் நேருவும், ஜவகர்லால் நேருவும் முதல் முறையாக கைது செய்யப்பட்டார்கள். அன்று முதல் ரேபரேலியில் நடைபெறும் அனைத்து போராட்டங்கள் மற்றும் தேர்தல்களில், ஒரு பக்கம் உண்மையும், ஜனநாயகமும் இருக்கும். மறுபக்கம் பயங்கரவாதமும், மக்களை மதிக்காத அரசியலும் இருக்கும். ரேபரேலி மக்கள் எப்போதும் உண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள்.
ரேபரேலியில் ஒருமுறை இந்திரா காந்தி தோல்வியடைந்தபோது அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சி செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த மண்ணில் எனது குடும்பத்தின் இரத்தம் கலந்துள்ளது. இந்த புனிதமான நிலத்தில் நமது முன்னோர்கள் அவர்களது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். இன்று அதே மண்ணில் நாம் நமது சுயமரியாதைக்காகவும், நமது உரிமைகளுக்காகவும் போராடுகிறோம். நாம் இந்த போரை முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும்."
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.