'5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது' - கபில் சிபல்
|5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது என கபில் சிபல் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது என மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"எனக்கு கிடைத்து வரும் தகவல்களின்படி 5-வது மற்றும் 6-வது கட்ட தேர்தல்களில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருப்பது தெரிகிறது. 5-ம் கட்ட தேர்தலில் இருந்து பா.ஜ.க. பின்னடைவை சந்தித்து வருகிறது. மக்கள் தற்போது ராமர் கோவில் பற்றி பேசவில்லை. மாறாக விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசி வருகின்றனர்.
கடந்த 2019 தேர்தலில் பட்டியலின, பழங்குடியின மக்களிடம் இருந்து பா.ஜ.க.விற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த முறை நிலைமை மாறிவிட்டது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறி வருவது வெறும் நகைச்சுவைதான்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.