காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்; பா.ஜ.க.வுக்கு வெட்கம் இல்லை - சசி தரூர் விமர்சனம்
|சமமான பலத்துடன் மோதி தேர்தலில் ஜெயிக்க முயல வேண்டும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பனாஜி,
தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் தங்கள் வேட்பாளர்களுக்கு போதிய நிதி ஆதாரம் கிடைக்கவில்லை என திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது எதிர்மறையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் எங்கள் வேட்பாளர்களுக்கு போதிய நிதி ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
ஒரு கையை பின்னால் கட்டிக்கொண்டுதான் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.விற்கு வெட்கம் என்பது இல்லை. ராகுல் காந்தி மற்றும் தி.மு.க. தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்படுகின்றன. ஆனால் பா.ஜ.க.வினர் மீது எந்த சோதனையும் செய்யப்படுவதில்லை. எதிர்கட்சியினரின் கைகளை கட்டிப்போடாமல், சமமான பலத்துடன் மோதி தேர்தலில் ஜெயிக்க முயல வேண்டும்."
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.