இந்திய தேர்தலில் ஆதிக்கம் செலுத்த அந்நிய சக்திகள் முயற்சி: பிரதமர் மோடி
|நெருக்கடி நிலைக்கு பின்னர், ஏழைகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும், இந்திய ஜனநாயகத்தின் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள், தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, இந்த எதிர்க்கட்சிகள் ஜூன் 4-ந்தேதி வரையே இருப்பார்கள் என நினைக்கிறேன். அதன்பின்னர், இந்த மக்களுக்கு சக்தியும் இருக்காது. அவர்களும் இருக்க போவதில்லை. என்னுடைய நாட்டின் சக்தி மற்றும் நம்முடைய ஒளி வீசும் ஜனநாயகம் மட்டுமே இருக்கும்.
இந்தியாவின் ஜனநாயகம் பற்றி, உலக நாடுகள் புதிய கண்ணோட்டம் கொண்டு பார்க்கும் என அவர் கூறினார். தொடர்ந்து பிரதமர் மோடி பேசும்போது, அந்திய சக்திகள் தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பதுடன், நம்முடைய மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்தவும் முயற்சிக்கின்றன.
ஆனால், இந்த முயற்சிகள் முடிவில் தோல்வியடையும் என்று பேசியுள்ளார். இந்திய மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. நெருக்கடி நிலைக்கு பின்னர், ஏழைகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும், இந்திய ஜனநாயகத்தின் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
விளக்கு அணைவதற்கு முன் பிரகாசத்துடன் எரிகிறது. அதனால், அவர்கள் விரைவில் இருட்டில் விடப்படுவார்கள் என அவர்களுக்கே தெரியும் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாட்டில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 94 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை 3-வது கட்ட வாக்கு பதிவு நடைபெறும். இதனால், நாளை மாலை வரை மொத்தம் 280 தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்கு பதிவு எஞ்சிய 4 கட்ட தேர்தலின்போது நடைபெறும்.