தமிழ்நாட்டில் தேர்தல் செலவுக்காக ரூ. 200 கோடி ஹவாலா பணம்; மலேசியாவில் சிக்கிய சென்னை நபர் - திடுக்கிடும் தகவல்
|மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அவரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
சென்னை,
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மலேசியா வழியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு சுற்றுலா பயணியாக புறப்பட்டு சென்றார்.
அப்போது, மலேசியாவில் குடியுரிமை அதிகாரிகள் வினோத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சட்டவிரோத பணபரிவர்த்தனைக்காக இந்தியாவில் இருந்து மலேசியா வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மலேசியாவில் இருந்து அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் வினோத்குமார் ஜோசப்பை கடந்த 7ம் தேதி சென்னைக்கு திருப்பி அனுப்பினர். மேலும், இது குறித்து சென்னையில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து மலேசியாவில் இருந்து சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்ட வினோத்குமார் ஜோசப்பை, சென்னை விமான நிலையத்தில் பிடித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், வினோத்குமார் ஜோசப்பின் செல்போன், லேப்டாப் ஐ-பேட் போன்றவைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர், துபாயில் உள்ள செல்வம் என்பவரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார் என்று தெரியவந்தது. மேலும் வைர வியாபாரத்தில் தொடர்புடைய மோனிகா என்ற பெண்ணிடமும் இவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து வினோத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினோத்குமார் ஜோசப், அப்பு என்ற ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. அந்த நபர், தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர் என்றும், தேர்தல் செலவினங்களுக்காக, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணங்கள் பரிவர்த்தனை மூலம், ரூ. 200 கோடி, இந்தியாவுக்கு கொண்டு வரும் திட்டத்துடன் வினோத் குமார் ஜோசப் செயல்பட்டதும் தெரிய வந்தது.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அப்பு நெருக்கமாக இருப்பவர் என்றும் தெரிய வருகிறது. எனவே அரசியல் கட்சி வேட்பாளர்களுக்காக ஹவாலா பணம் பரிமாற்றம் நடக்க இருந்ததா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அதேவேளை, ஹவாலா பணம், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததால் வினோத் குமார் ஜோசப்பை வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, வினோத்குமார் ஜோசப்பிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் 200 கோடி ரூபாய் ஹவாலா பணம் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது?, இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு? துபாயில் பின்னணியில் செயல்படுவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.