'3 வருடங்களாக அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர்' - ராதிகா சரத்குமார்
|தமிழகத்தில் ஊழல் குற்றசாட்டில் அமைச்சர்கள் சிறைக்கு செல்வதாக ராதிகா சரத்குமார் விமர்சித்துள்ளார்.
விருதுநகர்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ராதிகா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;-
"தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர். தேசத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் சிறைக்கு போகவில்லை, ஊழல் செய்ததால் போகிறார்கள்.
விருதுநகர் தொகுதியில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். மக்களுக்கு என்னால் நல்லது செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்."
இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.