புதுச்சேரி: பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
|பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவின் ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக புதுச்சேரி உள்துறை மந்திரி நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் பகுதியில் வந்திறங்கினார். இதனைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.