2-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
|11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
புதுடெல்லி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
அதே போல் ஏப்ரல் 26-ந்தேதி கர்நாடகா, கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 88 தொகுதிகளில் நடைபெறும் இந்த 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 11 மாநிலங்களில் ஏப்ரல் 5-ந்தேதியும், ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 6-ந்தேதியும் நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 8-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.