'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது' - அமித்ஷா
|பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஞ்சி,
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும், அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால், அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் பேசிய காணொலி ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சை பா.ஜ.க.வினர் விமர்சித்து வரும் நிலையில், மணிசங்கர் ஐயரின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;-
"அணுகுண்டு வைத்திருக்கும் பாகிஸ்தானை மதிக்க வேண்டும் என்று மணிசங்கர் ஐயர் கூறுகிறார். பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச வேண்டாம் என்று 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது, எந்த சக்தியும் அதை பறிக்க முடியாது என்பதை காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி இப்போது அணுகுண்டு பற்றி பேசி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, அது இந்தியாவுடன்தான் இருக்கும் என்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க. தெளிவாக உள்ளது.
70 ஆண்டுகளாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் கோவில் கட்டினார். ராகுல் காந்தி தனது வாக்கு வங்கிக்கு பயந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கத் தவறியது ஏன் என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்,"
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.