தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
|தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
சென்னை,
நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபடஉள்ளார். தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்துக்கு வர இயலாத கலெக்டர்கள் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளின் பணிகள் குறித்தும், வேட்பு மனு தாக்கலின் போது என்னென்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி எடுத்துரைப்பார். அது மட்டுமின்றி வாக்குச் சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் அவர் விவாதிக்கிறார்.