நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- மதுரை
|சினிமா என்றாலும், அரசியல் மாநாடு என்றாலும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நகரமாக மதுரை விளங்குகிறது.
சினிமா என்றாலும், அரசியல் மாநாடு என்றாலும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நகரமாக மதுரை விளங்குகிறது.
பாண்டியர்களின் தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை, மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில், 6-ம் படை வீ்டான பழமுதிர்சோலை, காந்தி மியூசியம், திருமலைநாயக்கர் மகால், பாய்ந்தோடும் வைகை, ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா தலங்கள் என்று மதுரை மாவட்டம் வரலாற்றில் தொன்று தொட்டு இடம்பெற்று வருகிறது. சிவபெருமான் தனது 64 திருவிளையாடல்களை மதுரையில் நிகழ்த்தியாக நம்பப்படுகிறது.அதே போல் தேச சுதந்திர ேபாராட்டத்துக்காக பல தலைவர்களை, இந்த மாவட்டம் தந்திருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியலுக்கு சொந்தக்காரரான கக்கனும் மதுரையின் முன்னாள் எம்.பி.தான். அனைத்துதரப்பு மக்களுடன் ஆலய பிரவேசம் நடந்து அகில இந்தியாவை திரும்பிப்பார்க்க வைத்த நகரமும் மதுரைதான்.
சித்திரை திருவிழா-தேர்தல் திருவிழா
பல சிறப்புகளை கொண்டிருக்கும் மதுரையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவும், தேர்தல் திருவிழாவும் இன்னும் சில நாட்களில் களைகட்ட தொடங்கிவிடும். அதற்கு முன்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதியின் கண்ணோட்டத்தை இங்கு அலசலாம்.
6 சட்டமன்ற தொகுதிகளை இணைத்து ஒரு நாடாளுமன்றத்தொகுதி என வரையறுக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதன்படி, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை இணைத்து மதுரை நாடாளுமன்றத்தொகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகள் தேனி நாடாளுமன்ற தொகுதியுடனும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகியவை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டு உள்ளன.
பழமையான தொகுதிகளில் மதுரையும் ஒன்று. 1951-52-ம் ஆண்டில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், மதுரை இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. அதில் பொது தொகுதி உறுப்பினராக பாலசுப்பிரமணியமும், ஆதிதிராவிடர் தொகுதி உறுப்பினராக கக்கனும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றனர். மதுரை தொகுதியில் அதிக முறை வென்ற கட்சி, காங்கிரஸ்தான். இங்கு காங்கிரஸ் கட்சி 8 முறை வென்றுள்ளது. அடுத்த இடத்தில் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் உள்ளனர்.
அதிகபட்சமாக 3 முறை எம்.பி. பதவி வகித்தவர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு. இவர் 2 முறை காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். 1998-ம் ஆண்டில் அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, மதுரை நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மு.க.அழகிரி வெற்றி
1999 மற்றும் 2004 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பா.மோகன் எம்.பி. ஆனார். 3-வது முறையாக 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளர் மு.க.அழகிரியிடம் தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் மு.க.அழகிரி 4,31,295 வாக்குகளும், பி.மோகன் 2,90,310 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மு.க.அழகிரி மத்திய மந்திரி ஆனார்.
2014-ம் ஆண்டில் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 4,53,785 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி 2,54,361 வாக்குகள் பெற்றார். 50 ஆண்டுகளாக தமிழகத்தை தங்கள் ஆளுமையின்கீழ் வைத்துள்ள தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்ற தொகுதியை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சிகள் இதுவரை மதுரை தொகுதியை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்துள்ளன.
தொழில் வளர்ச்சி இல்லை
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையும், கோவையும் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களாக கருதப்படுகின்றன. ஆனாலும் சென்னையில் உள்ளது போன்ற பெரு நிறுவனங்களோ, கோவையை போன்று வேலைவாய்ப்பை உருவாக்கவோ மதுரையில் போதிய தொழிற்சாலைகள் இல்லை என்பது இத்தொகுதியின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. கோவில் சார்ந்த தலங்கள் மட்டுமே உள்ள நிலையில், பொழுதுபோக்கு அம்சங்களும் மதுரையில் இல்லை.
மதுரை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணி முழுவீச்சில் தொடங்கவில்லை. மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள், வண்டியூர், கோச்சடை உள்ளிட்ட கண்மாய் சீரமைப்பு பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலையே உள்ளது.
மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வர்த்தக ரீதியாக அடுத்தக்கட்டத்துக்கு நகரம் வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வைகை ஆறு சுத்தப்படுத்தப்பட வேண்டும், ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஆன்மிக தலங்களில் உள்ள வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் உள்ளன. இவை எல்லாம் வாக்குறுதிகளாக வழங்கப்படும் என்று தெரிந்தாலும், யார் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடுகிறதோ, அவர்களின் சின்னத்துக்கே ஓட்டுகள் விழும்.
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் வெற்றி பெற்றார்.
முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-
சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) 4,47,075
ராஜ் சத்யன் (அ.தி.மு.க.) 3,07,680
கே.டேவிட் அண்ணாதுரை (அ.ம.மு.க.) 85,747
எம்.அழகர் (மக்கள் நீதி மய்யம்) 85,048
ஜெ.பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி) 42,901
வெற்றி யார் கையில்?
மதுரை மாவட்டத்தில் பரவலாக முக்குலத்தோர் வசிக்கின்றனர். இவர்களை போல நாயக்கர், ஆதிதிராவிடர், நாடார், யாதவர், முதலியார், பிள்ளைமார், மூப்பனார் உள்ளிட்ட சமுதாயத்தினரும், சவுராஷ்டிரா மக்களும், முஸ்லிம், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
2021 சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெற்றன. ஆனாலும் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. அணி 5 தொகுதிகளையும், தி.மு.க. அணி 5 தொகுதிகளையும் மதுரை மாவட்டத்தில் வென்றன.
அடுத்த 3 ஆண்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தி.மு.க. அணி அதே பலத்துடன் கூடுதலாக மக்கள் நீதி மய்யமும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க.வுடன் இணைந்து நின்ற பா.ஜனதா, இப்போது பா.ம.க., த.மா.கா., ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளை இணைத்து தனி அணியாக கட்டமைத்து இருக்கிறது. எனவே வாக்கு வங்கியை தக்க வைக்க தி.மு.க., அ.தி.மு.க. அணிகளும், அதே சமயம் தங்கள் பலத்த நிரூபிக்க பா.ஜனதா அணியும் தீவிரமாக களப்பணி ஆற்றும். இவர்களுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியும், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மைக் சி்ன்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள் என்கிறது.
தி.மு.க. கூட்டணியி்ல் 2-வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் தற்போதைய எம்.பி.யான சு.வெங்கடேசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் அ.தி.மு.க. அணியில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவில் இணைந்து, அக்கட்சி சார்பில் அ.தி.மு.க. அணி வேட்பாளராக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று களம் இறங்கி உள்ளார். பா.ஜனதா வேட்பாளராக பேராசிரியர் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பேராசிரியை சத்யாதேவி போட்டியிடுகின்றனர்.
சுயேச்சைகள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டி என்பது தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.