தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது - எல்.முருகன்
|தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஊட்டி,
மத்திய மந்திரி எல்.முருகன் ஊட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதல்-அமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது.
தி.மு.க.வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். இதற்கு உதாரணமாக 2ஜி, காமன்வெல்த் ஊழல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். சமூக நீதியை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே.சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. .பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். மேலும் ஐ.நா.சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர் தமிழ் மீது அக்கறை உள்ளவர் போல போலியாக வேஷம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.வினருக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் செல்லும் வாகனங்களில் அதிகாரிகள் அரைகுறையாக சோதனை நடத்துகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் நேர்மை தவறாமல் நடக்க வேண்டும். ஆ.ராசாவின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மெத்தனமாக சோதனை செய்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் ஆளும் கட்சியினர் என்று பாகுபாடு பாராமல் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.