< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நெல்லை எக்ஸ்பிரசில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டலில் அதிரடி சோதனை
நாடாளுமன்ற தேர்தல்-2024

நெல்லை எக்ஸ்பிரசில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டலில் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
7 April 2024 9:52 AM IST

சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.10 மணிக்கு வழக்கம்போல் எழும்பூரில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து, இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரெயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 3 பயணிகள் சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர், அந்த 3 பேரையும் உடனடியாக பணத்துடன் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், பணத்தை எண்ணியபோது அதில் 3 கோடியே 99 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் பிடிபட்டது நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.

நெல்லை எக்ஸ்பிரசில் பணத்துடன் பிடிபட்டது புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க. உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நெல்லையில் பணப்பட்டுவாடா செய்ய பணம் எடுத்து சென்றதாக பிடிபட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் தற்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பறக்கும்படையினரின் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்