பல்வேறு சவால்களை கடந்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு நன்றி... தேர்தல் கமிஷன்
|இந்திய ஜனநாயகமும், இந்தியத் தேர்தல்களும் மீண்டும் மாயாஜாலம் நிகழ்த்தி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
7 கட்டங்களாக நடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த 2½ மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த பல கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக அமைந்ததாக தேர்தல் கமிஷன் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளது. இதற்காக வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய ஜனநாயகமும் இந்தியத் தேர்தல்களும் மீண்டும் மாயாஜாலம் நிகழ்த்தி உள்ளன. சாதி, சமயம், மதம், சமூக-பொருளாதார மற்றும் கல்விப் பின்னணி என்ற பாகுபாடு இல்லாமல் சிறந்த இந்திய வாக்காளர்கள் அதை மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறார்கள்.
தேர்தலில் தங்கள் உறுதியான பங்கேற்பின் மூலம், இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நம்பிக்கையை வாக்காளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.
100 வயதை கடந்தவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் அளித்த வாக்குகளின் முக்கியத்துவம் பலருக்கு, குறிப்பாக ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லும் இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இந்த தேர்தலில் உண்மையான வெற்றியாளர், இந்தியா வாக்காளரே.
பல்வேறு சவால்களை கடந்து வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டு போட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்திய வாக்காளர்களால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார், தேர்தல் கமிஷனர்கள் கியானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து மற்றும் தேர்தல் கமிஷன் குடும்பம் பெருமை அடைந்து இருக்கிறது.
நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு அமைதியான, சீரான மற்றும் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் பணியாற்றிய பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கடுமையான காலநிலை, கரடு முரடான நிலப்பரப்பில் தளவாடங்களை எடுத்துச்செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், வேறுபட்ட மக்களுக்கு இடையே சட்டம் மற்றும் ஒழுங்கை நிர்வகித்தல் போன்ற பணிகளையும் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்திய தேர்தல்களின் முக்கியமான மையமாக விளங்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், தேர்தலில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஊடகங்களுக்கும் நன்றி. வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டு முயற்சிகள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளன. இது மிகுந்த கவுரவம் மற்றும் பாராட்டுக்கு தகுதியானவை.
நமது கூட்டு முயற்சியால் ஜனநாயகத்தின் சக்கரங்களை சுழல வைத்துள்ளோம்" என்று தேர்தல் கமிஷன் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.