தேர்தல் நடத்தை விதிகள்: மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா..? சத்யபிரத சாகு பதில்
|தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் மே தின நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பது குறித்து சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. எனவே எந்த நிகழ்ச்சிகளையோ, விழாக்களையோ நடத்துவதற்கு முன்பு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டும்.
இதற்கிடையே தொழிலாளர் தினமான மே தினம் வரும் மே 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கூட்டம், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொழிலாளர் அமைப்புகள் நடத்துவது வழக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்டபோது, 'மே தின நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனுமதி கோரப்பட்டது. இதற்கான அனுமதிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள்தான் வழங்க வேண்டும் என்பதால், மாவட்ட நிர்வாகங்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்பட உள்ளது' என்று பதிலளித்தார்.