< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

தினத்தந்தி
|
11 May 2024 12:52 PM GMT

நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 96 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் (13ம் தேதி) 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திரா (25 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (4 தொகுதிகள்), மத்தியபிரதேசம் (8 தொகுதிகள்), மராட்டியம் (11 தொகுதிகள்), ஒடிசா (4 தொகுதிகள்), தெலுங்கானா (17 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (8 தொகுதிகள்) ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும் செய்திகள்