முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு - ராதாகிருஷ்ணன் தகவல்
|முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தேர்தல் ஆணையம் இந்த முறை 12-டி படிவத்தை வழங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த படிவத்தின் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும். இதன்படி 85 வயதுக்கு மேற்பட்ட 63,751 நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10,370 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சென்னையில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாத 5.7 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது."
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.