< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு

தினத்தந்தி
|
22 April 2024 4:48 PM IST

பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் இது குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

டெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகின.

நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமிய மதத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பேசியதை பிரதமர் மோடி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு உள்ளது என்றனர். அப்படியேன்றால் இந்த சொத்துக்கள் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இந்த சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கருத்து தெரிவிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர், இந்த விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை' என்றார்.

மேலும் செய்திகள்