'திராவிட கட்சிகளுக்கு பா.ஜ.க.வைப் பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது' - குஷ்பு
|இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது என குஷ்பு தெரிவித்தார்.
சென்னை,
மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வைப் பார்த்து திராவிட கட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-
"மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு நிதியைப் பெறுகிறது. ஆனால் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. எனவே, இங்கிருந்து அனைத்து பா.ஜ.க. வேட்பாளர்களும் நாடாளுமன்றத்திற்கு சென்றால்தான் பிரதமரின் அனைத்து திட்டங்களும் மக்களிடம் சென்றடைய முடியும்.
தேர்தலில் நாங்கள் யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பா.ஜ.க.வை போட்டியாக பார்க்கின்றன. தமிழகத்தில் பா.ஜ.க. இல்லவே இல்லை என்று சொன்ன இரண்டு திராவிட கட்சிகளும் இன்று பா.ஜ.க.வைப் பார்த்து பயப்படும் அளவிற்கு பா.ஜ.க. வளர்ச்சி அடைந்துள்ளது."
இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.