கச்சத்தீவு விவகாரம்: இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - பா.ஜ.க.,விற்கு ப.சிதம்பரம் அறிவுரை
|கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பான காட்டமான அறிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் வெளியிடுகிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசுகளையும், தி.மு.க.வையும் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கச்சத்தீவை சின்ன பாறைதான் என்று கூறியவர் இந்திரா காந்தி என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில்,
கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி.அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா.ஜ. க தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?
கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா.ஜ.க தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது. உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.