< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
9 May 2024 6:25 PM IST

பிரதமர் பதவி கைவிட்டுப்போகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது.

2-ம் கட்டமாக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. குஜராத் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு கடந்த 9-ம் தேதி நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து 4-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 13ம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 தொகுதிகளுக்கும் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அதானி, அம்பானி குறித்தும் பெரும் வார்த்தை போர் இருதரப்பினரிடையே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் இந்தியாவில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

"இந்திய நாட்டின் இளைஞர்களே, ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும். பிரதமர் மோடி 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என கூறினார். ஆனால் அது பொய்யாகிவிட்டது. பிரதமர் பதவி தன் கையை விட்டுப் போகிறது என்ற பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார். அவரின் பொய் பிரசாரங்களில் கவனத்தை செலுத்தாமல், உங்களின் பிரச்சினைகளில் உறுதியாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்