'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' - கெஜ்ரிவால் கேள்வி
|‘பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்கு உள்ள ஆற்றல் சாதாரண மனிதரின் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா?' என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பா.ஜ.க. மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். வேலையின்மை மற்றும் பணவீக்கம் காரணமாக மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தங்கள் பிரச்சினைகளை பிரதமர் தீர்த்து வைப்பார் என்று மக்கள் நம்பினர். ஆனால் பிரதமரின் பேச்சில் வெறும் அவதூறுகள் மட்டுமே இருப்பதை மக்கள் இன்று பார்க்கிறார்கள்.
'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் மாங்கல்யத்தை பறித்துவிடுவார்கள், இரண்டு மாடுகள் இருந்தால் அதில் ஒன்றை கவர்ந்து சென்று விடுவார்கள், சரத் பவார் ஒரு தொலைந்து போன ஆத்மா, உத்தவ் தாக்கரே அவரது தந்தையின் போலியான மகன் என்றெல்லாம் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமரிடம் இருந்து மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
பிரதமர் மோடி தற்போது வேறு உலகத்தில் இருக்கிறார். சமீப காலமாக அவர் அளித்து வரும் பேட்டியில், தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் என்று கூறுகிறார். இந்த நாட்டின் மக்கள் மோடியை கடவுளாக ஏற்றுக்கொள்வார்களா? என்பதை நான் கேட்க விரும்புகிறேன். நாங்கள் ராமரையும், கிருஷ்ணரையும், சிவபெருமானையும் வணங்குகிறோம். மோடியை எப்படி நாங்கள் கடவுளாக ஏற்க முடியும்? பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நினைக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்."
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.