< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பா.ஜனதாவை தோற்கடிக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உறவில் இருக்கிறது - வானதி சீனிவாசன்

கோப்புப்படம் 

நாடாளுமன்ற தேர்தல்-2024

'பா.ஜனதாவை தோற்கடிக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உறவில் இருக்கிறது' - வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
7 April 2024 10:37 PM IST

தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய சென்னை பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ஆதரவாக, பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சென்னை தேனாம்பேட்டையில் பிரசாரம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளார். சென்னையை சர்வதேச நகரமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் பா.ஜனதாவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மத்திய மந்திரிகள் தமிழகம் வருவதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்துக்கு மத்திய மந்திரி சபையில் உள்ள 90 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வருகை தந்துள்ளனர். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கள்ள உறவில் இருப்பதாக தி.மு.க.வினரின் விமர்சிக்கிறார்கள். ஆனால், பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் உறவில் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சென்னையிலும் தி.மு.க. எம்.பிக்கள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். இது, நியாயமான கோபம்தான். இந்த கோபம், பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் மாறி வருகிறது" என்று வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும் செய்திகள்