சூடுபிடிக்கும் தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள்
|தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீது 28ம் தேதி பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பபெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, பல்வேறு கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தென்சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனும், பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தருமபுரி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல் இதேதொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் தனது குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பா.ஜ.க. கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய வேட்பாளர்கள் புகைப்பட தொகுப்பு:-