கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு அண்ணாமலை - ராதிகா பேச்சு
|தோனிபோல் அரசியல் களத்தில் சிக்சர்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்பதாக விருதுநகர் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா கூறியுள்ளார்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா மற்றும் சரத்குமாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வரவழைக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு, ராதிகாவுக்கு ஆண்டாள் கையில் வைத்திருக்கும் கிளி வழங்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா பேசியதாவது:-
இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் மோடி ஜி.. மோடி ஜி.. கோஷம்தான் ஒலிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கடிவாளம் போட்ட மாதிரி மாறுபட்டு இருக்கிறது. பா.ஜ.க.வினர் அனைவரும் மதவாதிகள்; சிறப்பாக செயல்பட மாட்டார்கள், தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என கூறுகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெளிவாக இருக்கிறார். அண்ணாமலை அரசியல் களத்தி தோனிபோல் சிக்சர்கள் அடிக்கிறார். இந்த மாதிரி சிக்சர்களை அரசியல் களத்தில் பார்த்ததில்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வின் மீது பயம் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.