சீட் தர மறுப்பு; காங்கிரசில் இணைந்த பா.ஜ.க. எம்.பி.
|பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எம்.பி. அஜய், இந்த தேர்தல் பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல், ஜனங்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும் என்று கூறினார்.
புதுடெல்லி,
பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நடப்பு எம்.பி.யாக இருப்பவர் அஜய் குமார் நிஷாத். பா.ஜ.க.வில் இருந்து 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அஜய்க்கு இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ராஜ் பூஷண் நிஷாத்துக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அஜய் பா.ஜ.க.வில் இருந்து விலகி இன்று காங்கிரசில் இணைந்துள்ளார். பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், பீகாரின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் மோகன் பிரகாஷ், கிஷன்கஞ்ச் தொகுதி எம்.பி. முகமது ஜாவித் மற்றும் காங்கிரசின் ஊடகம் மற்றும் விளம்பர துறை தலைவர் பவன் கேரா முன்னிலையில் அவர், காங்கிரசில் இன்று தன்னை இணைத்து கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய், தூக்கில் போடப்படும் நபருக்கு கூட கடைசி ஆசை என்னவென கேட்கப்படும். ஆனால், எனக்கு சீட் கிடையாது என முடிவானதற்கு முன் ஒரு முறை கூட அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்து கொண்ட நிஷாத், இந்த தேர்தல் பணபலத்திற்கான தேர்தலாக இல்லாமல், ஜனங்களின் பலத்திற்கான தேர்தலாக இருக்கும் என்று கூறினார்.