மோடி-அமித்ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை நீக்கிவிடுவார்கள் - கார்கே தாக்கு
|மோடி-அமித்ஷா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை நீக்கிவிடுவார்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
போபால்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. எஞ்சிய 6 கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 29 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் 2ம் கட்ட தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சட்னாவில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது,
மோடி - அமித்ஷா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும். மோடியும், அமித்ஷாவும் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கிவிடுவார்கள். அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமானால், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் வாக்கு உரிமை காப்பாற்றப்பட வேண்டுமானால் காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். மோடி - அமித்ஷா அரசு ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்
இவ்வாறு அவர் கூறினார்.