பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக்கோரிய மனு - ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவு
|மனு ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.
புதுடெல்லி,
கேப்டன் தீபக்குமார் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், "பிரதமர் மோடியும், அவருக்கு நெருக்கமானவர்களும் கடந்த 2018-ம் ஆண்டு நான் விமானியாக இருந்த ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டனர். ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ததில் மோடி தீவிர பங்கு வகித்தார். அதற்கான ஆவணங்களை அழித்தார். ஏர் இந்தியா என்னை பணிநீக்கம் செய்தது.
தேர்தலில் போட்டியிட தகுதி இருப்பதுபோல், தேர்தல் அதிகாரி முன்பு மோடி போலியாக உறுதிமொழி எடுத்துள்ளார். அவர் தற்போதைய தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, "மனு ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளுடன் இருக்கிறது. மறைமுக நோக்கமும், தீய நோக்கமும் கொண்டுள்ளது. அவதூறு கூறுவதையே நோக்கமாக கொண்ட இம்மனு அபத்தமானது. விசாரணைக்கு உகந்ததல்ல" என்று தனது உத்தரவில் அவர் கூறினார்.