சிறையில் இருந்தபடி உமர் அப்துல்லாவை தோற்கடித்த வேட்பாளர்: யார் இந்த என்ஜினீயர் ரஷீத்?
|என்ஜினீயர் ரஷீத்தின் தேர்தல் பிரசார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரர் ரஷீத் ஆகியோர் மேற்கொண்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கடும் பின்னடைவை சந்தித்தார். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஷேக் அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் ரஷீத் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியுள்ளார். பிற்பகல் நிலவரப்படி என்ஜினீயர் ரஷித் 195126 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லா தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், என்ஜினீயர் ரஷீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என்ஜினீயர் ரஷீத் யார்?
ஷேக் அப்துல் ரஷீத் என்ற என்ஜினீயர் ரஷீத் (வயது 56), அவாமி இத்தேஹாத் கட்சியின் தலைவர் ஆவார். 2008 மற்றும் 2014-ல் லாங்கேட் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.
இதற்கிடையே, 2019-ம் ஆண்டில் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) ரஷீத் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷீத், சிறையில் இருந்தபடி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
அவருக்கான தேர்தல் பிரசார பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரர் ரஷீத் ஆகியோர் மேற்கொண்டனர். இந்த பிரசார கூட்டத்திற்கு திரண்ட மக்கள், ரஷீத்துக்கு வாக்குகளாக மாறி, சிறையில் இருந்து அவர் விடுதலை ஆவதற்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படி மக்கள் அவரை எம்.பி.யாக தேர்ந்தெடுத்துள்ளனர்.