பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால்... - மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை
|பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சியமைத்தால் தலித்துகள், பழங்குடியினர் மீண்டும் அடிமைகளாக மாறுவார்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
துலே,
மராட்டியத்தில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் துலே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஷோபா பச்சவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி சுபாஷ் பாம்ரே போட்டியிடுகிறார்.
துலே தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "சுதந்திரத்திற்கு முன்பு, ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் அடிமைகளை போல நடத்தப்பட்டனர். பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை கொடுத்தால் இதே நிலைதான் மீண்டும் வரும். உங்கள் நலனுக்காகவும், உங்கள் சொந்த மக்களுக்காகவும் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும். எனவே இது ஒரு முக்கியமான தேர்தல்.
அரசியலமைப்பு சட்டம் இல்லையென்றால், உங்களை காப்பாற்ற யாரும் இருக்கமாட்டார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 2015-ல் கூறியிருந்தார். பின்னர், பல்வேறு பா.ஜனதா எம்.பி.க்களும், தலைவர்களும் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். பிரதமர் மோடி பொய்களை பரப்புகிறார். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பதாக மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைகளை வழங்குவதாகவும் அவர் கூறினார் ஆனால் ஒருபோதும் அதை அவர் செய்யவில்லை. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு பதிலாக அவரது தவறான கொள்கைகள் விவசாயிகளின் உற்பத்தி செலவை அதிகரித்தன. எனவே, பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும்" என்று அவர் கூறினார்.