நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
|வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது.
சென்னை,
543 தொகுதிகள் கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.
தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சவுக்கு கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி மற்றும் நகரும் கழிப்பறை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அலுவலர்கள் அமருவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன
வாக்கு எண்ணிக்கையின்போது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.