< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
பிரசார செலவுக்கு பணம் இல்லை... தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

கோப்புப்படம்

நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரசார செலவுக்கு பணம் இல்லை... தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

தினத்தந்தி
|
5 May 2024 10:13 AM IST

ஒடிசாவில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், அந்த மாநில சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. அங்கு ஆளும் பிஜூ ஜனதா தளம், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை வருகிற 13-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஒடிசாவின் புரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுசிதா மொகந்தி என்பவர் அகில இந்திய காங்கிரசால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அவர் திடீரென அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு அவர் இ-மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், புரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நிதி வழங்காததால் எனது தேர்தல் பிரசாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. கட்சி சார்பில் அவர்கள் பணம் கொடுக்க மறுக்கிறார்கள். எனது சொந்த பணத்தில் தேர்தல் செலவு செய்யுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

மக்களிடம் பணம் வசூலித்து பிரசாரம் செய்தேன். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே தேர்தலில் இருந்து விலகுகிறேன். மேலும் அவர் கூறுகையில், 'பா.ஜனதாவும், பிஜூ ஜனதா தளமும் பண மழையால் மக்களை நனைத்துள்ளன. எங்கும் செல்வமாக காணப்படுகிறது. பிரசார செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன். மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் முடியவில்லை' என்று தெரிவித்தார்.

புரி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். மனுவை வாபஸ் பெற 9-ந் தேதி இறுதிநாளாகும். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்