< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
காங்கிரஸ் கட்சி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது - பிரதமர் மோடி

Image Courtesy : ANI

நாடாளுமன்ற தேர்தல்-2024

'காங்கிரஸ் கட்சி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது' - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
15 May 2024 9:20 PM IST

இந்தியாவில் வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க காங்கிரஸ் கட்சி நினைக்கிறது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை அங்கு 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், வரும் 20-ந்தேதி 5-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கல்யான் பகுதியில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

"காங்கிரஸ் கட்சி இந்தியாவில் வகுப்புவாத பிரச்சினைகளை உருவாக்க நினைக்கிறது. இது குறித்து நான் பேசினால், நான் வகுப்புவாத அரசியல் செய்வதாக என் மீது அவர்கள் பழி சுமத்துகிறார்கள். ஆனால் உண்மையில், காங்கிரஸ் கட்சியின் உண்மையான நோக்கத்தை மட்டுமே நான் வெளிப்படுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியால் வளர்ச்சியைப் பற்றி பேசவே முடியாது. இந்து-முஸ்லிம் பற்றி பேசி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க காங்கிரஸ் முயல்கிறது. அவர்களைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது, அவர்களுக்கு வாக்களித்தவர்களின் வளர்ச்சி மட்டும்தான்.

காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்த நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை இருப்பதாக மன்மோகன் சிங் கூறினார். மேலும் பட்ஜெட்டை பிரிப்பது பற்றியும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் கட்சி பட்ஜெட்டை இந்து பட்ஜெட் மற்றும் முஸ்லிம் பட்ஜெட் என்று பிரிக்க விரும்பியது. பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் கட்சி நினைத்தது.

காங்கிரஸ் கட்சி இந்த பாவத்தை செய்து கொண்டிருந்தபோது நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தேன். அந்த சமயத்தில் நான்தான் இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தேன். காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் இதைத்தான் மீண்டும் செய்யப்போகிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துமாறு பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி கெஞ்சிக் கொண்டிருந்தது. நீங்கள் எனக்கு வாய்ப்பளித்து பிரதமராக்கிய பின்னர், பாகிஸ்தானுக்கு வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் தாக்குதல் மூலம் நாம் பதிலளித்தோம். தற்போது பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதால் அவர்களை நாம் மதிக்க வேண்டும் என காங்கிரஸ் கூறுகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும்போது பாகிஸ்தான் நம்மை அச்சுறுத்தியது. தற்போது ஆட்சியில் இல்லாத சமயத்தில், பாகிஸ்தான் நம்மை அச்சுறுத்தும் என்று கூறி காங்கிரஸ் கட்சி நம்மை அச்சுறுத்துகிறது. காங்கிரஸ் கட்சி ஏன் பாகிஸ்தானின் பினாமி போல் செயல்படுகிறது?"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்