நாட்டின் முடிவில்லா கலாசாரத்தின் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் நினைத்ததே இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு
|2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் மறைந்து விடும் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேசியுள்ளார்.
லகிம்பூர் கேரி,
நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி நகரில் நடந்த பொது கூட்டமொன்றில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, 8 முதல் 9 ஆண்டுகளில் 25 கோடி மக்களை மத்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது என உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் கூறி வருகின்றன என்றார். தொடர்ந்து அவர், நாம் இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காங்கிரசார் எப்போது, என்ன செய்வார்கள் என்று எதுவும் கூறி விட முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும், நாட்டின் முடிவில்லா கலாசாரத்தின் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் கட்சி ஒருபோதும் நினைத்ததே இல்லை. இந்தியாவின் பாரம்பரிய தன்மையை பாதுகாப்பது நாட்டின் ஒவ்வொரு அரசின் பொறுப்புணர்வுடன் கூடிய கடமையாகும்.
நாட்டில், நாங்கள் இதனை செய்வோம் என கூறி, அதனை செய்ய கூடிய ஒரே கட்சியாக பா.ஜ.க. உள்ளது. இரு அவைகளிலும் எப்போது எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்குமோ, அன்று சட்ட பிரிவு 370-ஐ ரத்து செய்வோம் என கூறினோம்.
இதன்படி பெரும்பான்மை பெற்றதும் அதனை நாங்கள் செய்தோம். இதேபோன்று, குடிசையில் இருந்து கடவுள் ராமர் அரண்மனைக்கு சென்று விட்டார். இதற்கு இந்தியாவில் ராமராஜ்ஜியம் தொடங்கி விட்டது என அர்த்தம் என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியா மற்றும் சீன எல்லை பகுதியில் காங்கிரஸ் சாலைகளை அமைக்கவில்லை. ஏனெனில், இந்தியாவுக்குள் சீனர்கள் நுழைந்து விடுவார்கள் என அவர்களுக்கு பயம். நாங்கள் எல்லை பகுதிகளில் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்தி வருகிறோம். எவரேனும் ஊடுருவினால், சரியான பதிலடி தரப்படும் என்றார்.
5 முதல் 10 ஆண்டுகளில் சமாஜ்வாடி கட்சியை மக்கள் மறந்து விடுவார்கள் என நான் நினைக்கிறேன். 2024 தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் மறைந்து விடும் என்றும் அவர் பேசியுள்ளார்.