ஜம்மு காஷ்மீர், லடாக்கில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டி
|ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள 6 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய இந்தியா கூட்டணி இணைந்து செயல்படும் என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள், மாநில கள நிலவரங்களுக்கு ஏற்ப தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஒருசில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான தொகுதி பங்கீடு நிறைவடையாத நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களமிறக்குவதாக அறிவித்தது. ஜம்முவில் உள்ள இரண்டு தொகுதிகளில் காங்கிரசை ஆதரிக்க முடிவு செய்தது.
அதன்பின்னர் இன்று நடைபெற்ற அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி இணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள 6 தொகுதிகளிலும் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இரண்டு கட்சிகளும் தலா மூன்று தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். அதாவது, உதம்பூரில் லால் சிங் சவுத்ரி, ஜம்முவில் ராமன் பல்லா, அனந்த்நாக் தொகுதியில் மியான் அல்டாப் ஆகியோர் போட்டியிடுவார்கள். மற்ற மூன்று தொகுதிகள் அதாவது, பாரமுல்லா, ஸ்ரீநகர் மற்றும் லடாக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள 6 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய இந்தியா கூட்டணி இணைந்து செயல்படும். இதன் மூலம் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உடனிருந்தார்.