< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
காங்கிரசின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடி: டாக்டர் ராமதாஸ் விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரசின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடி: டாக்டர் ராமதாஸ் விமர்சனம்

தினத்தந்தி
|
9 April 2024 12:01 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.

சமூகநீதியை வலுப்படுத்த பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பயனற்றது என்று உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்; இது முழுமையான மோசடி ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கோ, ஆட்சி அமைக்கவோ வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வாக்குறுதி அளிப்பதிலும் நீதி, நியாயம் இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அது கூட இல்லை என்பதைத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த வாக்குறுதி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இத்தகைய பயனற்ற, குழப்பமான கணக்கெடுப்பைத் தான் நடத்தப்போவதாக வாக்குறுதி அளித்து இந்திய மக்களை குறிப்பாக தமிழக மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சி முயல்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதாக மார்தட்டிக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும்.

காங்கிரஸ் கட்சியையே சமூகநீதிக் கொள்கைகளை ஏற்கவைத்து விட்டதாக பெருமிதம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இப்போது காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்வாரா? அல்லது 1948-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைத்து தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்காவிட்டால் கூட்டணியை முறிப்போம் என்று கூறி தங்களுக்கு முதுகெலும்பு இருப்பதை உறுதி செய்வாரா? என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் வலிமையாக அமரும் பாட்டாளி மக்கள் கட்சி, இந்தத் திருத்தங்களைச் செய்து 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்