டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
|டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூத்த தலைவர் அகர்வால், வடகிழக்கு டெல்லியில் கன்னையா குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை கட்சித்தலைமை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இதில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மூத்த தலைவர் அகர்வால், வடகிழக்கு டெல்லியில் கன்னையா குமார், வடமேற்கு டெல்லியில் உதித்ராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப்பின் பாட்டியாலா தொகுதியில் தர்விர் காந்தி நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் ஆம் ஆத்மியில் இருந்து சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவர் ஆவார். இதைத்தவிர அமிர்தசரஸ், பதேகார் சாகிப் உள்ளிட்ட தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் உஜ்வல் ரேவதி ராமன் சிங் வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். சமாஜ்வாடி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் சமீபத்தில்தான் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.