< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024

பதிலுக்கு பதில்.. காங்கிரஸ்-இந்தியா கூட்டணி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்

தினத்தந்தி
|
2 Jun 2024 9:23 PM IST

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த கணிப்புகளை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஏற்கவில்லை. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கூறுகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று தேர்தல் ஆணையத்திற்கு சென்று மனு கொடுத்தனர். வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதியன்று தேர்தல் ஆணையம் அனைத்து நெறிமுறைகளையும் முறையாக பின்பற்றவேண்டும் என்றும், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு, தபால் வாக்குகளை எண்ணி அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்தியா கூட்டணியின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பா.ஜ.க. மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பா.ஜ.க. குழுவும் தேர்தல் ஆணையத்திற்கு சென்று புகார் மனு அளித்தது. அதில், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பிற கட்சிகள் மற்றும் சில சிவில் சமூகக் குழுக்கள் இந்தியாவின் தேர்தல் செயல்முறையின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டியிருந்தது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை மற்றும் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல் கூறியதாவது:-

இந்தியாவின் மிகவும் வலுவான தேர்தல் செயல்முறைக்கு எதிரான அவர்களின் (எதிர்க்கட்சிகள்) முயற்சிகள், நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் மீதான நேரடி தாக்குதல் ஆகும். அவர்களின் செயல்பாடுகள் பொது ஒழுங்கு மற்றும் தேர்தல் அமைப்பு மீதான நம்பிக்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

தேர்தல் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டோம். மேலும், தேர்தல் செயல்முறையின் நேர்மையை உறுதிப்படுத்தும் வகையில் பொது அறிக்கை வெளியிடவேண்டும் என்றும், ஜனநாயக செயல்முறையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்