நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார்: நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி
|சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது, நீலகிரி உதவி செலவின பார்வையாளர் சரவணன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவரின் செலவினக் கணக்கை மறுபரிசீலனை செய்வதற்கான வழிகளை கண்டறிய மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பிக்கிறார். நீலகிரி தொகுதியில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், உதவி செலவின பார்வையாளரின் புகாரை கவனத்தில் கொண்டுள்ளோம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்
வேட்பாளர் செலவின கணக்கு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீலகிரி கலெக்டர் அருணா விளக்கம் அளித்துள்ளார். ஆய்வுக்கு வராத, செலவு கணக்கு மாறுபாடுள்ள வேட்பாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.